ரி-20 உலகக்கிண்ண தொடரின் 34ஆவது போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
டுபாயில் நேற்று (வியாழக்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 15 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷமீன் ஹொசைன் 19 ஓட்டங்களையும் நய்ம் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஆடம் ஸம்பா 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஹெசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 74 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 6.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 40 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் ஸம்பா தெரிவுசெய்யப்பட்டார்.