கிறிஸ்மஸ் காலத்தில் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார்.
இதுவரை இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் இது ஒரு சாதனை என்றும் சஜித் ஜாவிட் கூறினார்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பூஸ்டர் தடுப்பூசிகள் குளிர்காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30% மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40% இன்னும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றக்கொள்ளவில்லை என தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் குளிர்காலத்தை கடக்க அனைவரும் தமது பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சஜித் ஜாவிட் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட சிலருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.