நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி செயலணியில் தங்கியிருக்காமல், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது சட்டமா அதிபர் ஜனாதிபதியிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என ஐ.தே.க அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயலணியொன்றை நியமித்து, அமைச்சரவையில் விவாதிக்காமல், நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் அதிகார வரம்பில் இருந்து நீக்கும் நடவடிக்கை “கேலிக்குரியது” என்றும் ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என ஐ.தே.கட்சி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உடனடியாக இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோருகின்றோம் என ஐ.தே.க தெரிவித்துள்ளது.