ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.
தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளப் பகுதியில், நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெனரல் சாத் மான் கூறுகையில், இரண்டு ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் மட்டுமே படுகொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவை பாக்தாத்தின் வடகிழக்கில் 12 கிமீ தொலைவில் இருந்து ஏவப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.


















