மட்டக்களப்பு மாவட்டத்திலும் பருவகால மழை வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் அச் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் கிரான், ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் காண்பிக்கப்பட்டிருந்தது.
கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், யானைகளால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு அனர்த்த வேளைகளில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகள் தனிநபர்களால் நிறப்பப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை அனர்த்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அரிசி போன்றவற்றின் பொருட் கையிருப்பு போதுமானதாக உள்ளதா என்பது தொடர்பாக வாராந்த பொருளிருப்பு கணக்கொடுப்பினை சதோச மற்றும் தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.