நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் எத்தகைய இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், முப்படைகள் மற்றும் பொலிஸார் எத்தகைய இயற்கை அனர்த்தங்களை எதிர் கொள்வதற்கும் தயாராக உள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டவுடன் உடனடியாகவே அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக சீரற்ற காலநிலை நிலவும் காலங்களில் சுற்றுலா செல்லுதல், மலை ஏறுதல், நீர்நிலைகளில் குளித்தல், படகு சவாரி செய்தல் உட்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறின்றி ஏனையோரது உயிர்களும் பாதிக்கும் வகையில் செய்யப்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.