கடந்த 24 மணி நேரத்தில் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 20 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 10 ஷென்யாங் ஜே-16 மற்றும் ஆறு செங்ட் ஜே-10 போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தேசிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
16 போர் விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்தின் தென்மேற்கு மூலையில், டோங்ஷா தீவுகளுக்கு (பிரதாஸ் தீவுகள்) வடகிழக்கே ஊடுருவிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நான்கு ஜே-16 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்திருந்தன.
அத்துடன் தென்மேற்கு மூலையில் மீண்டும் டோங்ஷா தீவுகளுக்கு அருகிலேயே அந்தப் பிரவேசமும் அமைந்திருந்தன.
தாய்வானின் விமானப்படை மேற்படி அத்துமீறல் நிகழ்வுகளின்போது, போர் விமான ரோந்து, வானொலி எச்சரிக்கைகளை ஒளிபரப்புதல் மற்றும் நில அடிப்படையிலான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அவற்றைக் கண்காணித்தல் ஆகிய பதில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
கடந்த மாதம் ஒக்டோபர் முதலாம் திகதி சீனாவின் தேசிய தினத்தன்று, தாய்வானின் வான் பரப்பிற்குள் 38 சீன இராணுவ விமானங்கள் அத்துமீறியிருந்ததோடு, அதற்கு அடுத்த தினமும் 39 விமானங்கள் அத்துமீறியிருந்தன.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தாய்வான் தனியாக ஆளப்பட்டு வந்த போதிலும், அதன் இறையாண்மையைக் பெய்ஜிங் கோருகின்றது.
பீஜிங்கால் பலமுறை எதிர்க்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் மூலோபாய உறவுகளை அதிகரிப்பதன் மூலம் சீன ஆக்கிரமிப்பை தாய்வான் எதிர்கொண்டு வருகிறது.