கொரோனா தொற்றுநோயின் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளைப் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டியுள்ளார்.
அத்துடன் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெறுவதற்கான தமது கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்ட அவர், பின்னர் புதுடில்லியில் உள்ள என்.டி.எம்.சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, அவர் ‘இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசியின் செலுத்தும் பணியை பாராட்டுகின்றேன். ஆரம்பத்திலிருந்தே தடுப்பூசிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியதை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
முடக்கலை அறிவித்த 48 மணி நேரத்திற்குள், 80 கோடி மக்களுக்கு எட்டு மாதங்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கி வந்தோம் என்று குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் அற்ற குழந்தைகளுக்கான திட்டம், மூலம் அடுத்த தலைமுறை மற்றும் குழந்தைகளுக்காக பிரதமரும் எமது அரசாங்கமும் எவ்வாறான அக்கறை கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படுகின்றது’ என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, ஜனநாயக செயல்முறைகளில் பங்கேற்க மக்கள் எவ்வாறு தயாராக இருக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு ஜனவரி 2021 இல் தொடங்கப்பட்ட 28,400 கோடி ரூபா மதிப்பிலான தொழில் மேம்பாட்டுத் திட்டம் மிகவும் முக்கியமானது.
56,201 கோடி மதிப்பிலான 54 திட்டங்களும் அங்கு தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஜன் ஒளஷதி யோஜனா திட்டத்தின் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.
மேலும், 75,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தின் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை பாஜக கடுமையாக கண்டிப்பதாகவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் கட்சி துணை நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டதோடு அனைத்து சட்ட நடவடிக்கைகளின் போதும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம், மேலும் வங்காளத்தில் உள்ள கட்சியில் உள்ள ஒவ்வொரு பாஜக தொழிலாளிக்கும் ஆதரவளிப்போம்’ என்றும் அவர் கூறினார்.