சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இரசாயன உரத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது.
இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
எனினும், சில இறக்குமதிகளைச் செய்வதாக இருந்தால் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது.
அத்துடன், சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் குரூப் லிமிடெட் நிறுவனத்தை கரிம உரங்களை வழங்குவதற்கு திறந்த ஏலத்தின் மூலம் இலங்கை தேர்ந்தெடுத்தது என கொள்கை ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
சீன நிறுவனத்திடமிருந்து 63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 99,000 மெட்ரிக் டொன் உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இருப்பினும், பகுப்பாய்வில் அதில் தீங்கு விளைவிக்ககூடிய பற்றியாக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சீன உரத்துடன் நாட்டுக்குள் பிரவேசிக்க இருந்த சரக்கு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சீனா மேலும் கோபத்திற்கு உள்ளானது.
இலங்கை தர நிலை நிறுவனங்கள் உள்ளிட்டவை இரண்டு மாதிரிகளில் மண், தாவரங்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நோய்க்கிருமிகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்ததாக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
உண்மையில், இலங்கை விஞ்ஞானிகளின் கருத்துப்படி இந்த உரம் முழுமையாகவே நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் அது அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஏற்படுத்துகிறது என சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.
சிந்தனைக் குழுவின் கருத்துப்படி, இலங்கையின் தலைமைக்கு சீனாவின் அழுத்தம் பலனளிக்கவில்லை.
இதனால், இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்தது.
தமது நாட்டின் நிறுவனம் ஒன்றினால் ஏற்றுமதி செய்யப்பட்ட உரங்களை இலங்கை அனுமதிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள சீனா தயாராக இல்லை என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஆகவே பீஜிங் கொழும்பை தன்னுடன் இணங்கிச் செல்வதற்கு அழுத்தங்களை தந்திரமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் நட்பு நாடான சீனா தனது தோல்வியிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றது.
அதனை ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறது என்பதைப் பார்க்க அனைத்துக் கண்களும் ஆவலாக உள்ளன.