முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம், நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், முள்ளியவளை பிரதேசத்தில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக்கோரி, முள்ளியவளை பொலிஸாரினால் நேற்று(புதன்கிழமை) மாங்குளம் சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கமைய முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 11 பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க 12 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட 12 பேருக்கு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவில் மூன்று பேருக்கும், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 9 பேருக்கும், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 14 பேருக்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.