நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள நிலையிலும் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர்.
கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து வருகின்ற விவசாயிகள் தொடர்ச்சியாக உரப்பிரச்சினைகளுக்கும், முகம் கொடுத்து வருவதுடன், இடையில் காலநிலை மாற்றத்தினையும் எதிர்கொண்டு விவசாய நடவடிக்கைகளை பாரிய சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியா வெஸ்டவோட் பிரதேச விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் மரக்கறி வகைகளை பாராமரிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
தாம் இப்பிரதேசத்தில் பாரியளவில் விவசாயத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள் கடந்த காலங்களில் விவசாயத்தினால் கூடுதலான நன்மையை பெற்று வாழ்வாதாரத்தை ஊக்கப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் விவசாயத்துறையை ஊக்குவிக்க எதிர்கால திட்டம் ஒன்றை முன்கூட்டியே அறிவிக்காத அரசாங்கம், திடீரென தான்தோன்றி தனமாக உரத்தை தடை செய்து பாரிய சிக்கலை கடந்த காலங்களில் உண்டாக்கியது.
இதன்விளைவு தொடர்ச்சியாக விவசாயிகளை பாதித்து வரும் நிலையில் நுவரெலியாவில் வெஸ்டவோட் பிரதேச விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலை இன்று உச்சம் பெற்றுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக உரப்பிரச்சினையே பிரதான பிரச்சினையாக உள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் பயிர்களுக்கு ஏற்ற உரங்களை வழங்குவதில் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் வீதியோரங்களில் மரக்கரி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.