தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்துள்ளது.
தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்களது நாட்டின் தலைநகரில் திறக்க அனுமதித்ததன் பின்னணியில் சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பெய்ஜிங்கில் நேற்று (வெள்ள்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறுகையில்,
‘லிதுவேனியா தலைநகர் வில்னியஸில் தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும். இதற்காக சீனா உரிய பதிலடி கொடுக்கும்’ என கூறினார்.
எனினும், லிதுவேனியாவுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அவர் கூறவில்லை.
உலகின் எல்லா முக்கிய நாடுகளுடனும் வர்த்தக அலுவலகங்களையும் அதிகாரப்பூர்வமற்ற தூதரகங்களையும் தாய்வான் கொண்டுள்ளது. தாய்வானுடன் 15 நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான தூதரக உறவைக் கொண்டுள்ளன.
முதலாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த லிதுவேனியா, கடந்த 1918ஆம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனம் செய்தது. தாய்வானும் சீனாவின் கிங் அரச வம்ச ஆட்சியிலிருந்து அதே ஆண்டில் தன்னை விடுவித்துக் கொண்டது.
அதையடுத்து, இரு நாடுகளும் கடந்த 1921ஆம் ஆண்டு தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்டன. லிதுவேனியாவை சோவியத் ஒன்றியம் கடந்த 1940ஆம் ஆண்டில் இணைத்துக் கொள்ளும் வரை இந்த உறவு தொடர்ந்தது.
பின்னர் சோவியத் ஓன்றியம் சிதறுண்டு, லிதுவேனியா மீண்டும் தனி நாடான பிறகு தாய்வானுக்கு பதில் சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள அந்த நாடு முடிவு செய்தது.
இந்தச் சூழலில், சீனாவால் லிதுவேனியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு அறிக்கையில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு, லிதுவேனியாவுக்கும் தாய்வானுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அலுவலகத்துக்கு இணையான பிரதிநிதித்துவ அலுவலகத்தை அமைத்துக்கொள்ள லிதுவேனிய நாடாளுமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கெனவே லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை சீனா திரும்ப அழைத்தது. மேலும், தங்கள் நாட்டிலிருந்து லிதுவேனியத் தூதரையும் வெளியேற்றியது.
இந்தச் சூழலில், வில்னியஸ் நகரில் தாய்வான் பிரதிநிதித்துவ அலுவலகம் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.