தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில், மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு வடக்கில் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றங்களில் அனுமதி கோரியிருந்தன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்குக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
வருடாந்தம், நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.