சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்தானந்தவினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கடந்த அரசாங்கம் இறுதி வருடத்தில் 3.7 பில்லியன் ரூபா செலவிட்டிருப்பதாகவும், ஆனால் 2020ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி 1.7 பில்லியன் ரூபா மாத்திரமே செலவினங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்கு மாத்திரம் 2,000 மில்லியன் ரூபா நிதி செலவு செய்திருந்தோம். அதன் பின்னர் உணவு உற்பத்திக்கு 500 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம். 2019ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 4,000 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம்.
அதன்படி பார்க்கும்போது பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கிராம சக்தி வேலைத்திட்டம் நாடுபூராகவுமுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், இன்று அந்த வேலைத்திட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயின் அந்த வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக நீக்கப்படும்.
சிறுநீரக நோயாளர்களுக்காக கடன் வாங்காமல் நன்கொடை பெற்று பொலனறுவையில் வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை.
இதுவே இன்றைய நிலைமை. சுற்றுாடல் பாதுகாப்புக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், 5 ஆணைக்குழுக்கள் போன்றனவும் செயற்பட்டன. இவற்றுக்காகவும் நிதி செவிடப்பட்டிருந்ததது.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்றன. பண்டாரநாயக்கவுக்கு பின்னா் அரசாங்கத் தரப்பில் தவறு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு கடந்த ஜனாதிபதி ஒருவரே நடவடிக்கை எடுத்திருந்தாா் என்பதை மறந்துவிடவேண்டாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கும் தனியான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆகவே, 3.7 பில்லியன் ரூபா நிதியை அநாவசியமாக செலவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறோம்.
எங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தோம். ஆனால், அதிகாரத்தை பெற்றுக்கொண்டு முழு அதிகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கே வழங்கினார்கள்.
மக்களின் நம்பிக்கைக்காகவே 2018 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் பிரதமராக்கினாா் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். ரோஹித அபயகுணவர்தன அவரின் உரையில் கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 386 வாகனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கின்றாா். இந்த கருத்தில் எது உண்மை.
தற்போதைய ஜனாதிபதி 3 வாகனங்களையே பயன்படுத்துகின்றாா். அது சிறந்த விடயம். ஆனால், வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வரையறைகள் இருக்கின்றன. இது யாவரும் அறிந்ததே. எதுவும் தெரியாத குழந்தைகளை போன்று பொய்கூற கூடாது.
இவ்வாறான கருத்துகளை முன்வைக்கும்போது பொறுப்புடன் சிந்தித்து உரையாற்ற வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் பேசினால் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாற்ற முடியும்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான விடயத்தை தெரிவித்தது இது முதல் தடவையல்ல. ஓரிரு தடவைகளில் இதனை நிறுத்தினால் பிரச்சினையில்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கு சேறு பூசும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியாது.
நாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மயிலைபோன்று ஆடிக்கொண்டிருக்கினறாா். மஹிந்தானந்த சேற்றை கிளறிக்கொண்டிருக்கிறாா்.
தொடர்ந்து கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தாக்க வேண்டுமென்றால் நேரடியாக மோதுங்கள். எங்கள் கட்சி தலைமையின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.
அவ்வாறு செய்றபட்டால் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இவ்வாறான கருத்துகள் தொடர்பில் சபாநாயகரும் கவனம் செலுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.