அரசாங்கம் மேலும் ஒரு போராட்டத்திற்கு பணிந்திருக்கிறது அல்லது தனது தவறான முடிவுகளை மிகவும் பிந்தியேனும் மாற்றியிருக்கிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் பணிந்தது.மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதைப் போலவே கடந்த புதன்கிழமை அரசாங்கம் செயற்கை உரம் தொடர்பான தனது முடிவை மாற்றியிருக்கிறது.
இயற்கை உரத்தைத்தான் பாவிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சுற்றுச்சூழல் தொடர்பான இதுபோன்ற விவகாரங்களை எடுத்த எடுப்பில் அமுல்படுத்த முடியாது. இது முதலாவது. ஒரு தொற்றுநோய் காலகட்டத்தில் இதுபோன்ற பசுமைப்புரட்சி விடயங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியாது. இது இரண்டாவது. மூன்றாவது, இன நல்லிணக்கத்தை பேண முடியாத ஓர் அரசாங்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது. ஏன் என்றால் மனிதர்களை நேசித்தால்தான் பூமியை நேசிக்கலாம்.மண்ணை நேசிக்கலாம். சுற்றுச்சூழலை நேசிக்கலாம். மனிதர்களை நேசிப்பது என்பது இந்த அழகிய தீவை பொறுத்தவரை சக இனங்களை நேசிப்பது. இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவது. அதன்மூலம் நிகழ்காலத்துக்கு பொறுப்புக் கூறுவது.
செயற்கை உரப்பாவனையை நிறுத்த வேண்டும் என்பதில் இக்கட்டுரைக்கு மறு கருத்து கிடையாது. ஆனால் அரசாங்கம் இயற்கை உரம் என்ற கோஷத்தை முன்வைத்த காலகட்டம்தான் பிழையானது. அதை அமுல்படுத்திய விதம்தான் பிழையானது. இதற்கு முன் இருந்த எல்லா அரசாங்கங்களும் வாக்கு வேட்டைக்காக தொடர்ச்சியாக வழங்கிவந்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான ஓர் அரசியல் தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்தது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்தே முன்னிருந்த பல அரசாங்கங்கள் விவசாயிகளின் வாக்குகளை கவர முற்பட்டன. அதிகம் போவானேன், ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்தவும் அதைத்தான் செய்திருக்கிறார். மண்ணை நஞ்சாக்கும் ஒரு விடயத்தில் விவசாயிகளுக்கு மானியத்தை வழங்குவதன்மூலம் தமது வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் நிறைந்த ஒரு நாட்டில் திடீரெண்டு செயற்கை உர இறக்குமதியை நிறுத்தியபோது அது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராடத் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல உரம் இன்மையால் வேளாண்மை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரசாங்கம் மிகவும் பிந்தி தனது முடிவை மாற்றிக் கொள்வதற் கிடையில் ஒரு போகம் கடந்துவிட்டது. இதன் விளைவை எதிர்காலத்தில் நுகர்வோர்தான் சுமக்க வேண்டியிருக்கும்.
அதுமட்டுமல்ல அரசாங்கம் இப்பொழுது உர இறக்குமதியை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. தனியார் இறக்குமதி செய்யும் உரத்தின் விலையை அவர்களே தீர்மானிக்கப் போகிரார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அரசாங்கம் விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதனால் வணிகர்களே விலைகளை தீர்மானிக்க தொடங்கினார்கள். இனி உரத்தின் விலைமையும் அப்படித்தான். இது எங்கே கொண்டுபோய் விடும்? உரத்தின் விலை அதிகரித்தால் விவசாய விளை பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அது இறுதியிலும் இறுதியாக மக்களின் சாப்பாட்டில் கை வைக்கும். எனவே நெருக்கடிகள் இப்பொழுதும் முற்றாக தீர்ந்து விட்டன என்று இல்லை.
ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் அரசாங்கம் பணிந்திருக்கிறது. இது ஏனைய தரப்புகளின் போராட்டத்தை ஊக்குவிக்கும்.இப்பொழுது போராடிக்கொண்டிருக்கும் ஏனைய தொழிற்சங்கங்கள் மேலும் ஆவேசமாக போராடக்கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதுமட்டுமல்ல அரசாங்கத்துக்கு எதிராக சாதாரண ஜனங்களின் போராட்டங்களும் இனி அதிகரிக்கக்கூடும். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அரசாங்கத்துக்கு எதிராக அதிகரித்த போராட்டங்களுக்கான ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது.
எனினும் எல்லா எதிர்ப்புகளையும் மடைமாற்றவும் திசை திருப்பவும் இருக்கவே இருக்கிறது இனமுரண்பாடு.அவர்கள் அதனை வெற்றிகரமாக கையாளலாம்.யுத்தத்தை வென்றதுதான் இந்த அரசாங்கத்துக்குள்ள ஒரே அடிப்படைத் தகுதி. அதனால் யுத்த வெற்றியை அடிக்கடி அவர்கள் சிங்கள மக்களுக்கு நினைவுபடுத்தி வருகிறார்கள். அந்த நினைவுகளை சிங்கள மக்கள் மறந்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் அதிகம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஓர் ஆயுதப் போராட்டத்தை திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதரவுத் தளத்தை பாதுகாக்கிறார்கள்.
கடந்தவாரம் அனுராதபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட போர் வீரர்களுக்கான நினைவுத்தூபியும் அவ்வாறான ஒரு நோக்கத்தைக் கொண்டதுதான். தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மறக்கப்படும் ஒரு மாதத்தில் அரசாங்கம் தனது போர் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நினைவுத்தூபியை திறந்து வைத்திருக்கிறது.இந்த நினைவுத்தூபி தொடர்பாக கருத்து தெரிவித்த பேராசிரியர் அகலகட சிறீசுமண தேரர் பின்வருமாறு கூறியுள்ளார்…..”போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக்கூடாது. சந்தஹிரு சேய தாதுகோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும் நினைவுத் தூபியாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது ஆரம்பிக்கப்பட்ட போதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் .குறித்த நினைவிடங்களை நிர்மாணிப்பது தோல்வியடைந்த தமிழ் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும் என்றும் அப்படியான மனநிலை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. போரில் வென்றவர்கள் திருப்தியும் பெருமையும் அடைவார்கள். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரமடைவார்கள் என்றும் இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், இராணுவத்தினர் சிலரும் மாத்திரமே மகிழ்ச்சியடைவர்”
ஆனால் அரசாங்கம் தனது வெற்றியை தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியில் நினைவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற வெற்றியை தொடர்ந்து நினைவு படுத்துவது என்பது அதன் எல்லாவிதமான விளைவுகளையும் கருதிக் கூறின் இன முரண்பாடுகளை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருப்பதுதான்.நிச்சயமாக இன நல்லிணக்கத்தை உருவாக்க அது உதவாது. நிச்சயமாக பல்லினத் தன்மை மிக்க ஒரு யாப்பை கட்டியெழுப்புவதற்கு அது எதிரானது.
ஒரு புதிய யாப்பை உருவாக்க போவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருகிறது. குறிப்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள் அப்புதிய யாப்புக்கான வரைவு வெளிவந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்தப் போவதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஜெனிவா கூட்டத் தொடர்களைச் சமாளிப்பதற்கும் இந்தியாவை சமாளிப்பதற்கும் மேற்குநாடுகளை சமாதானப்படுத்துவதற்கும் இவ்வாறான அறிவிப்புக்கள் அவர்களுக்கு உதவக்கூடும். எனினும் அரசாங்கம் தனது அறிவிப்புகளில் இதயசுத்தியோடு இல்லை என்பதை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய லக்ஸ்மன் கிரியல்ல வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதாவது 13வது திருத்தத்தை அகற்றுவதுதான் அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்று தெரிகிறது. மாகாணக் கட்டமைப்பு எனப்படுவது இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்வு என்று அவர்கள் நம்புகிறார்கள். அது தமிழ் மக்களுக்கு ஒரு சட்டசபையைப் பெற்றுக் கொடுத்து விட்டது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். 2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் பெற்ற வெற்றிகளின்பின் தமிழ் மக்களுக்கு இனி அப்படிப்பட்ட தீர்வு எதுவும் தேவையில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை மாகாணசபையை அகற்றுவதுதான். அவ்வாறு மாகாணசபையை அகற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் எப்படிப்பட்ட ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரும்? மேலும் மாகாணசபை தேர்தல்களை நடத்துமா?
புதிய யாப்பு ஏன் தேவை? ஏற்கனவே இருக்கின்ற யாப்பு இனப்பிரச்சினையை தீர்க்க தவறியபடியால்தானே?ஆனால் அரசாங்கம் நம்புகிறது போரில் தமிழ் தரப்பை தோற்கடித்ததன் மூலம் இனப்பிரச்சினையும் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. எனவே இனி வரக்கூடிய ஒரு புதிய யாப்பில் ஏற்கனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் மூலம் கிடைத்த மாகாண சபையை அகற்றுவதுதான் தாங்கள் பெற்ற யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக முழுமையடையச் செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போல் தெரிகிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியும் அந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் என்று கருத இடமுண்டு.எனவே அரசாங்கம் மெய்யாகவே ஒரு யாப்பை கொண்டுவருமாக இருந்தால் அது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் நோக்கிலானதாகவே இருக்க முடியும். இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், யுத்த வெற்றியை ஒரு அரசியல் வெற்றியாக முழுமையடையச் செய்வது. அதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தலாம். முதலாவது மாங்காய் தமிழ் மக்களை நிரந்தரமாக தோற்கடிப்பது.இரண்டாவது மாங்காய் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படும் சிங்கள வாக்காளர்களை திசை திருப்பலாம். அவர்களுடைய கோபத்தை தமிழ் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் மடைமாற்றி விடலாம்.