தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் 2025 காலப்பகுதியில் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நாட்டின் வறுமையும் பொருளாதார வீழ்ச்சியுமே போருக்கு வழிவகுக்கின்றது எனவும் த.இன்பராசா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம், இந்த நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்குத் தள்ளும் செயற்பாட்டினையே முன்னெடுக்கின்றது என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி, தமிழ் மக்கள் அங்கீகரிக்காத ஒருவர். பெரும்பான்மையின மக்களினால் கொண்டுவரப்பட்ட ஒரு ஜனாதிபதி. இலங்கையில் இரண்டு நாடு இருக்கின்றது என்பதைத் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலின்போதே காட்டியிருக்கின்றார்கள். இதனை நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் சர்வதேச ரீதியிலும் இருப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென த.இன்பராசா கூறியுள்ளார்.
ஆகவே இத்தகைய நிலைமையில் எமது தமிழ் அரசியல்வாதிகள், மிகத் தந்திரோபாயமான முறையில் இதயசுத்தியுடன் செயற்பட்டு, எமது தமிழ் மக்களுக்கான தீர்வு, பொருளாதாரம் என்பன தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.