ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறிய முடியும் என்றும் மாதிரிகள் மூலம் வைரஸை கண்டறியும் வரை, நாடு முழுவதும் தொற்று பரவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டைக் கொண்டு செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை தற்போதைய நிலையில் நாட்டை முடக்கும் எண்ணம் சுகாதார அமைச்சுக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.