தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியே தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 இல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2011 இல் சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். மீண்டும் தற்போது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை ஒன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவருகின்றது.
பொங்கல் பண்டிகையின்போது நியாய விலை அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படவுள்ள 20 இலவசப் பொருட்கள் கொண்ட துணிப்பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆயினும், 2022ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறைத் திகதிகளில் சித்திரை முதலாம் திகதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குழப்பம் குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் வினவப்பட்டபோது, தமிழ்ப் புத்தாண்டுத் திகதியை தை முதலாம் திகதிக்கு மாற்றுவது குறித்து இதுவரை அரசுத் தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, என தெரிவித்துள்ளனர்.