ஐ.பி.எல். 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன. அந்த வகையில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிந்திர ஜடேஜா, எம்.எஸ்.டோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் டோனியை விட அந்த அணியைச் சேர்ந்த சகலதுறை வீரரான ரவிந்திர ஜடேஜா அதிக விலைக்குத் தக்க வைக்கப்பட்டுள்ளார். ஜடேஜாவை இந்திய நாணய மதிப்பில் 16 கோடி ரூபா கொடுத்தும், டோனியை 12 கோடி ரூபா கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி, ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபா கொடுத்தும் தக்க வைத்துள்ளது அணி நிர்வாகம். இந்த 4 வீரர்களைத் தக்கவைக்க 42 கோடியைச் செலவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதுகுறித்துப் கருத்துத் தெரிவித்த சென்னை அணியில் இம்முறை இடம்பிடித்திருந்த ரொபின் உத்தப்பா, முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் ரவிந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வுபெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அடுத்த கப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படுவார் என்பதற்கான அறிகுறிதான் இது. சி.எஸ்.கே. அணியில் ஜடேஜாவின் மதிப்பு டோனிக்கு நிச்சயம் தெரியும், என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வீரரான பார்த்தீவ் படேல், ‘ஜடேஜா சி.எஸ்.கே. அணியின் அடுத்த கப்டனாக உரிமையாளரால் பார்க்கப்படுகிறார். ஒரு வீரராக ஜடேஜா அசத்திவருகிறார். தேசிய அணியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் 6 ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாடுவதைப் பார்த்தோம். ஜடேஜா கப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதைப் பார்க்க விரும்புகிறேன். டோனி விளையாடுவதில்லை என்று முடிவு செய்தவுடன் ரவீந்திர ஜடேஜா கப்டனாக பொறுப்பேற்பார் என நான் நினைக்கிறேன், என்று தெரிவித்திருக்கிறார்.