மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கையணி இரண்டு விக்கெட்டுகளை ரன் அவுட் முறையில் இழந்து தடுமாற்றமான நிலையில் உள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிஸ்சில் இலங்கையணி 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் வீரசமி பெர்மோள் தன்னுடைய அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சுப் பெறுதியோடு 5 விக்கெட்டுகளையும், ஜோமெல் வரிகன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கையின் பதும் நிசங்க 73 ஓட்டங்களும், திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களும் சேர்த்தனர்.
மே.தீவுகள் தனது முதலின்னிங்சில் களமிறங்கி 253 ஓட்டங்களை எடுத்தது. அணித்தலைவர் பிரத்வைட் 72 ஓட்டங்களை எடுக்க, பிளக்வூட் 44 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இலங்கையணியின் ரமேஸ் மென்டிஸ் 6 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
49 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கையணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 46 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 5 ஓட்டங்களை எடுத்தவேளையிலும் ஒசத பெர்னான்டோ 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் ரன் அவுட்டாகியிருந்தனர்.
3 ஓட்டங்கள் பின்னிலையில் எட்டுவிக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து இலங்கையணி துடுப்பெடுத்தாடவிருக்கிறது.