உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லாட்வியா தலைநகர் ரிகாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்,
‘உக்ரைனின் நிலைத்தன்மையை சீர்குலைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. மேலும் உக்ரைனுக்கு எதிராக மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் ரஷ்யா ஆயத்தமாகி வருவதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
ரஷ்யா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என கூறினார்.
உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு படைகளை அனுப்பிய ரஷயா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டது.
இதேபோல குளிர்காலத்தின்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து, கிரிமீயாவைப் போல அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகின்றது. ஆனால் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.