2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 114 மில்லியன் கொவிட் தடுப்பூசி அளவை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில், பிரித்தானிய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசியின் 60 மில்லியன் கூடுதல் அளவுகள் மற்றும் மேலும் 54 மில்லியன் ஃபைசர்- பயோஎன்டெக் அளவுகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சாஜித் ஜாவிட் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் இன்னும் எங்கள் சிறந்த தற்காப்பு அளவு எனவும் நீண்ட காலத்திற்கு நமக்குத் தேவையான போதுமான அளவுகள் நாட்டில் இருப்பதை கூடுதல் அளவுகள் உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் கூறினார்.
பிரித்தானியாவில் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் அடையாளம் காணப்பட்ட தொற்றுகள் நேற்று (புதன்கிழமை) 32ஆக அதிகரித்ததன் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் மேலும், ஒன்பது தொற்றுகள் மற்றும் ஸ்கொட்லாந்தில் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த மாறுபாடு இப்போது கிழக்கு மிட்லாண்ட்ஸ், இங்கிலாந்தின் கிழக்கு, லண்டன், தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.
அடையாளம் காணப்பட்ட ஸ்கொட்லாந்து தொற்றுகள், லனார்க்ஷயர் மற்றும் கிரேட்டர் கிளாஸ்கோவில் உள்ளன.
ஒமிக்ரோன் கண்டறிதலுக்கு மத்தியில், அரசாங்கம் சமீபத்தில் பிரித்தானியா திரும்பும் பயணிகளுக்கான பி.சி.ஆர். சோதனைகள் தொடர்பான விதிகளை கடுமையாக்கியது மற்றும் அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை அறிமுகப்படுத்தியது. அத்துடன் இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசகளை மீண்டும் கொண்டு வந்தது.