மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஒமிக்ரோன் என்ற புதிய வைரஸ் பிறழ்வும் உருவாகியுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் திண்டாடுகின்றன.
இலங்கையிலும் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது.
கோதுமா மா விலை உயர்வானது பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல ‘கேஸ்’ பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எந்நேரத்தில் எந்த பாகம் வெடித்து சிறதும் என தெரியவில்லை. இந்நிலைமைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்புக்கூறவேண்டும்.
விஞ்ஞானப்பூர்வமான நடைமுறைகளை அவர்கள் முறையாக பின்பற்றியிருந்தால் இந்நிலைமையை தவிர்த்திருக்கலாம். இது மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, உறுதியான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.