ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு அமெரிக்காவும் பல நட்பு நாடுகளும் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
முன்னாள் அரசாங்கத்திற்கோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற உறுதிமொழியை தலிபான் அரசாங்கம் மதிக்க வேண்டும் என்றும் 22 நாடுகள் கூட்டாக கோரியுள்ளன.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேலும் 19 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இந்த கூட்டறிக்கை அமெரிக்காவால் வெளியிடப்பட்டது.
குறிப்பாக கொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கை குறித்த செய்திகளினால் தாங்கள் ஆழ்ந்த கவலையடைவதாகவும் அந்நாட்டுகள் தெரிவித்துள்ளன.
இந்த வார தொடக்கத்தில் தலிபான்கள் ஆட்சியின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய ஒரு மோசமான அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டது.
100 க்கும் மேற்பட்ட முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகளின் மரண தண்டனைகள் மற்றும் கடத்தல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் 15 மற்றும் ஒக்டோபர் 31 க்கு இடையில் தலிபான்களிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும் இது ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.