வடக்கு எத்தியோப்பியாவின் இரண்டு நகரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய சாலைகளில் கொள்ளையர்கள், கொள்ளையடித்ததை அடுத்து உணவு உதவி விநியோகத்தை உலக உணவுத் திட்டம் நிறுத்தி வைத்துள்ளது.
வடக்கு அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள இரண்டு மூலோபாய நகரங்களான கொம்போல்சா மற்றும் அருகிலுள்ள டெஸ்ஸி ஆகியவற்றில் உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிக்ராயன் படைகளின் கொள்ளையர்கள், கொம்போல்சா நகரில் உதவிப் பணியாளர்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சில ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உட்பட பெரிய அளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவர்கள் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தை நடத்தும் ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர், ‘அங்குள்ள ஊழியர்கள் தீவிர மிரட்டலை எதிர்கொண்டதாக’ கூறியுள்ளார்.
மேலும், ‘ஆயுதப் படைகளால் மனிதாபிமான ஊழியர்களுக்கு இத்தகைய துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நமது மனிதாபிமான பங்காளிகள் அனைவருக்கும் மிகவும் தேவைப்படும் போது உதவிகளை வழங்குவதற்கான திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது’ என கூறினார்.
வடக்கு எத்தியோப்பியா டிக்ராயன் மற்றும் அரசாங்கப் படைகளுக்கு இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் பாரிய பட்டினியை எதிர்கொள்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலான சண்டைக்குப் பிறகு, ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முக்கியமான உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன என ஐ.நா. தெரிவித்துள்ளது.
டிக்ரே கிளர்ச்சியாளர்களிடமிருந்து நகரங்களை மீட்டதாக எத்தியோப்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால், தாங்கள் கைவிடப்பட்ட பகுதிகளை மட்டுமே இராணுவம் மீட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.