நுவரெலியா- டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06-12-2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண், ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, கறுப்பு கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக பேரணியாக வந்து, குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சரியான விசாரணையை முன்னெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனையின்போது இறந்தவரின் உடலை பார்க்கவிடாமல் பெட்டியினை திறக்கப்படாமல் நல்லடக்கம் செய்ய பொலிஸார் அனுமதி வழங்கியதாகவும் ஆற்றில் மிதந்த சடலம் உடையின்றி கிடந்தமையால் இதில் சந்தேகம் நிலவுவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் முறைக்கேடான விடயங்கள் நடந்திருப்பின் சட்டத்தின் முன் குற்றவாளி நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி இல்லை. இது தொடர்பான அறிக்கை பொலிஸாரால் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டகாரர்கள் குற்றம் சுமத்தினர்.
ஆகவே இந்த விடயத்தில், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.