2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரையில் 7 நாட்களுக்கு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அன்று மாலை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
அதற்கமைவாக 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பமான குழு நிலையிலான விவாதம் சனிக்கிழமை உள்ளடங்கலாக இன்று வரை 16 நாட்கள் இடம்பெற்றன.
இந்தநிலையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளிக்கப்பட்டிருந்ததுடன், எதிராக 64 வாக்குகளிக்கப்பட்டிருந்தன.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் எதிராகவே வாக்களித்திருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.