ஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம் கருத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே, இந்த முடிவுக்கு வருவதற்கான முதன்மைக் காரணம் என, அத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையை தலைமையேற்று நடத்திய புகழ்பெற்ற பிரித்தானிய வழக்குரைஞர் சர் ஜப்ரி நைஸ் கூறுகையில், நீண்ட கால விளைவாக உய்கர் முஸ்லிம்கள் உள்ளிட்ட இன சிறுபான்மை மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், திட்டமிட்ட, முறையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஸின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் முதன்மை பொறுப்பிலிருந்து நழுவியுள்ளனர் என, தீர்ப்பாயம் நம்புவதாக, அவர் தெரிவித்தார்.
இத்தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தீர்ப்பாயத்தின் இறுதி அறிக்கை, சட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும், இதன் முடிவுகள் அமைச்சர்களைக் கட்டுப்படுத்தாது. எனினும், சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, இனப்படுகொலை விவகாரத்தில் சுதந்திரமான முடிவை எட்டுவோம் என, அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் சீன அரசாங்கம் மறுத்துள்ளது.