இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் அதற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் அத்தியாவசிய பொருட்களுடன் 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடனை அடைக்க இலங்கையால் முடியுமா என்பதே அனைவருடைய கேள்வியாக உள்ளது என கூறினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சரியான பொருளாதார கொள்கையை உருவாக்குவதே ஒரே வழி என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் நேர்மையான அரசியலுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.