அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அனுமதிப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தெஹ்ரானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியன்,
‘ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையானது பொருளாதாரத் தடையால் எங்கள் நாட்டின் எண்ணெய்த் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறோம்.
ஈரானின் கச்சா எண்ணெய் தடையின்றி விற்பனை செய்யப்பட வேண்டும்; அதற்கான தொகை வந்து சேர வேண்டும் என்பதே இதன் நோக்கம். அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம்’ என கூறினார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காடிப்ஷாதே, ‘ஒப்பந்தத்தை தாண்டி எதையும் ஈரான் கோருவதை மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனக் குற்றம்சாட்டினார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இந்த மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தையில், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் பேசவுள்ளன.