ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பெயர் தெரியாத நிலையில், வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை 2-3 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்பதால், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பித்து ஆதரவைத் தேடும் பெண்கள் பெரும்பாலும் தங்குமிடம் அல்லது பாதுகாப்பான வீடுகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்கள் சிலரின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பாதுகாப்பு கோரி 4-5 மாதங்கள் அவர்கள் இலங்கையில் இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
சக்திவாய்ந்த ஆதரவுடன் இயங்கும் சில விபச்சார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகத்தின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கையில் (TIP Report) இலங்கையில் மனித கடத்தல் தரமிறக்கப்படும் அபாயத்தை நாடு எதிர்நோக்கும் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தற்போது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள இலங்கை, மனித கடத்தலை எதிர்த்துப் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தரமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆதாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.