வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார்.
முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார்.
குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை.
அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த காரணமாகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள்.
அதன்பின்னர், பொதுநூலகத்திற்குச் சென்று அங்கும் தமது காலடியைப் பதிப்பதற்காக ஷி ஜின் பிங்கின் புத்தகத்தையும், கொரோனா விழிப்புணர்வுப் புத்தகத்தையும் வழங்கியிருந்தார்.
அதுமட்டுமன்றி, தமிழர்களின் கலாசாரத்திற்கு தன்மை மாற்றிக்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்திற்கும் சென்றிருந்தார். இவையெல்லம் தமிழ் மக்களை தம் பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளே ஆகும்.
ஆனால் இந்த முயற்சிகளுக்குப் பின்னால், வடக்கில் தாம் அகலக்கால் வைப்பதே ஒரே நோக்கமாக அவருக்கு இருந்தது.
குறிப்பாக மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்க தக்க சக்தி திட்டத்தினை ஒட்டுமொத்த வடக்கு தமிழர்களும் எதிர்க்கின்றபோதும் அதனை நிச்சயமாக முன்னெடுப்போம் என்றே கூறியிருக்கின்றார்.
இதனை விடவும், புளிந்தீவு, குதிரைமலை ஆகிய தீவுகளை ‘வெளிநாட்டு முதலீடுகள்’ என்ற பெயரில் கையப்படுத்துவதற்கான பூர்வாங்க கண்காணிப்பையும் செய்திருக்கின்றார்.
அத்துடன், தமிழர்களின் வரலாற்றுப்பொக்கிசமான பழைய கச்சேரி கட்டடத்தினையும் பார்வையிட்டு அதனையும் மீள் நிர்மாணம் என்ற பெயரில் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதை இலக்காக வைத்து காய்களை நகர்த்தியுள்ளார்.
இதனைவிடவும், கிளிநொச்சி கௌதாரி முனைக்குச் சென்றவர் அங்கு கடலட்டைப் பண்ணையைப் பார்வையிட்டதோடு எதிர்காலத்தில் கடலட்டை இனப்பெருக்கம் உள்ளிட்ட இதர செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப கட்டமைப்புக்களை அங்கு ஸ்தாபிப்பது தொடர்பில் கரிசனை கொண்டிருக்கின்றார்.
இதன்பின்னர், மன்னாருக்குச் சென்றவர் வடக்கு மக்களின் தொப்புள்கொடி உறவாக இருக்கும் தமிழகத்திற்கு இடையில் உள்ள எட்டாவது மண்திட்டுவரையில் சென்று திரும்பியிருக்கின்றார். இந்தப் பயணத்திற்கு முழுமையான ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படையே செய்துள்ளது.
இவ்வாறிருக்க, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வடக்கில் சீனாவின் பிரசன்னத்தினை விரும்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை எதிர்பார்க்கின்றார்கள். அதற்காக ஜெனிவா வரையில் போரடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்தப்போராட்டத்தனை நீர்த்துப்போகும் செயற்பாட்டில் சர்வதேச தளங்களில் சீனா இலங்கை அரசாங்கத்துடனேயே இணைந்து செயற்படுகின்றது.
அதுமட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வப்போது ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று அனைத்திலிருந்தும் சீனாவே காப்பாற்றிக் கொண்டும் இருக்கின்றது.
அவ்விதமானதொரு தரப்புடன் நட்பு பாராட்டுவதற்கு தமிழர்கள் தயாராக இல்லை. அதுமட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இதுவரையில் சீனா மௌனம் சாதித்து வருவதோடு, அது உள்நாட்டு விவகாரம் அதில் ஒருநாட்டின் இறைமையைத் தாண்டி தலையீடுகளைச் செய்யப்போவதில்லை என்றும் கூறிவருகின்றது. அவ்விதமான ஒரு நாடு தமிழர்கள் மீது உண்மையான கரிசனையைக் கொண்டிருக்கின்றது என்று எவ்வாறு நம்பலாம்.
இவை எல்லாவற்றையும் விடவும், அண்மையில் சீனாவிலிருந்து வருகை தந்திருந்த உரக்கப்பலை சீனாவுக்கு ஆதரவான, சீனா முழுமையாக நம்புகின்ற, ஒத்துழைப்புக்களை வழங்கின்ற ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்தபோது அதன் பிரதிபலிப்பு சீனாவை முழுமையாக தோலுரித்திருந்தது.
குறிப்பாக, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இட்டதோடு, உரக்கப்பலுக்கான இழப்பீட்டினையும் கோரியிருந்தது சீனா.
இந்தச் செயற்பாடுகள் சீனா இலங்கையின் உண்மையான நண்பனா என்ற கேள்வியை மட்டுமல்ல, சீனாவைச் சார்ந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திற்கே இந்த நிலைமையென்றால் ஏனையவற்றை பேசிப் பயனில்லை என்ற தோற்றப்பட்டை அம்பலமாக்கியுள்ளது.
ஆக, சீனா இலங்கை அரசாங்கத்தினை மட்டுமல்ல, தமிழர்களையும் தனது நலன்களுக்காவே அரவணைக்கிறது. அரவணைக்க முயல்கின்றது. இந்த விடயத்தில் தமிழர்கள் விழிப்பாக இருக்கின்றார்கள்.
அதனால் தான் தமிழ் மக்களின் ஆணைபெற்ற சுமந்திரன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் சீனா வடக்கு, கிழக்கில் காலடி பதிப்பதை விரும்பவில்லை என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினை வடக்கு,கிழக்கில் உள்ள எந்தவொரு தமிழ் மகனும், மகளும் எதிர்க்கவில்லை. எதிர்க்கப்போதுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சீனாவின் ஆபத்து பற்றி ஏலவே அறிந்திருக்கின்றார்கள். அவநம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அதிலொரு நியாயமும் உள்ளதல்லவா.
-பெனிற்லஸ்-