உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இருநாடுகளுக்கு இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை எச்சரித்துள்ளார்.
இருநாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) கிட்டத்தட்ட சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலின் போது, புடின் இதனைத் தெரிவித்தார்.
பிற்பகல் 3.35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை இந்தப் பேச்சுவார்த்தை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்ததால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டில் ரஷ்யா அமெரிக்கா இடையே அரச முறை பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதைக் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் பதற்றத்தைத் தணித்த பிறகுதான் இருதரப்பிலும் சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் உருவாகும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இரு தலைவர்களும் விரைவில் காணொளி வாயிலாக கலந்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
அதே அழைப்பில் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் ஜோ பைடன் என கூறியுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் ரஷ்ய தரப்போ தன் நாட்டு எல்லைக்கும் தன் துருப்புகளை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ள தங்களுக்கு சுதந்திரமிருக்கிறது என கூறுகின்றது, மேலும் உக்ரைன் மீது படையெடுக்க எந்தவித திட்டமும் இல்லை என்றும் மறுத்துவருகிறது.
உலகின் இரு முக்கிய நாட்டு ஜனாதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை என்பது நினைவுகூரத்தக்கது.