பிரதேசசபைத் தேர்தலானாலும் , மாகாணசபைத் தேர்தலானாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திரக் கட்சிக்கு உண்டு என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் தானாகச் சென்று கூட்டணியமைக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தத்தினை கையெழுத்திட்டு , நிபந்தனைகளுடனேயே அவர்களுடன் இணைந்து கூட்டணியமைத்தோம்.
எனவே அரசாங்கம் ஏதேனும் தவறிழைக்குமாயின் அதனை சுட்டிக்காட்டக் கூடிய உரிமை எமக்கிருக்கிறது. காரணம் நாம் இந்த ஆட்சியை அமைப்பதற்கு பாடுபட்டவர்களாவோம். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு அமையவே நாம் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தோம்.
இன்று செய்யும் முட்டாள் தனமான செயற்பாடுகள் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் இல்லை. அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு காணப்படும் உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும். சரியான வேலைத்திட்டங்களுடனேயே நாம் தீர்மானங்களை எடுப்போம். அதற்கு நாம் அஞ்சப் போவதில்லை.
நாம் யாருடைய அழுத்தத்தின் காரணமாகவும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை. எமக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் பொறுப்பு கூற வேண்டும்.
நாம் கிராம மட்டங்களுக்குச் சென்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அங்குள்ள முற்போக்கு சக்திகள் எம்முடன் இணையும்.
அதற்கமைய அவ்வாறான அமைப்புக்களுடன் எமது தலைமைத்துவத்தின் கீழ் நாம் பலமானதொரு கூட்டணியை அமைப்போம்.
அதற்கமைய எதிர்காலத்தில் கூட்டணி அரசாங்கம் அமைந்தாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழேயே அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே எவ்வித அச்சமும் இன்றி நிலைப்பாடுகளை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினால் , இன்றே அந்த சவாலை ஏற்று விலகத்தயார். பிரதேசசபைத் தேர்தலானாலும் , மாகாணசபைத் தேர்தலானாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திர கட்சிக்கு உண்டு என்றார்.