பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கீழ் இருந்த விடயங்கள் மற்றும் நிறுவனங்கள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி நிறுவனம் என்பனவே கல்வி அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
10 அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சின் நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகள் நீதி அமைச்சிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த இருந்தார்.
இருப்பினும் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக வெளியான குற்றச்சாட்டை அடுத்து அவர் அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
மேலும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாச்சார நிதியம், புத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 அத்தியாயம்) மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம், 1988 இலக்கம் 2 ஆகியவை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.