உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையின்போது இதை ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தரப்பில் வெண்டி ஷெர்மன் மற்றும் ரஷ்யா தரப்பில் செர்கெய் ரியாப்கோவ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினர்.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பிற்குப் பிறகு, இரு தரப்பினரும் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
இதன்போது ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கூறுகையில்,
‘உக்ரைனைத் தாக்கும் திட்டமோ, நோக்கமோ எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் எங்கள் சக ஊழியர்களிடம் விளக்கினோம்.
ரஷ்யர்கள் தங்கள் அமெரிக்க சகாக்களிடம் துருப்புக்கள் மற்றும் படைகளின் போர் பயிற்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் எங்கள் எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இது தொடர்பாக எந்த ஒரு தீவிரமான சூழ்நிலையும் பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை’ என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் வெண்டி ஷெர்மன், ஒவ்வொரு தரப்பின் பாதுகாப்புக் கவலைகளையும் நன்கு புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வெளிப்படையான மற்றும் நேரடியான விவாதங்கள் என்று விபரித்தார்.
ஆனால், பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் எல்லைக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. இது ஊடுருவல் மற்றும் மேற்கு நாடுகளின் எச்சரிக்கைகள் பற்றிய அச்சத்தைத் தூண்டுகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையில், மேற்கு நாடுகளுடன் மாஸ்கோ மோதலில் ஈடுபட்டுள்ள அபாயங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.