இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கைக்கான சீன தூதரகமே வெளியிடுவதை தவிர்த்து இரகசியம் காத்து வந்தன.
பொதுப்படையில், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றமையையும், அரசி, இறப்பர் ஒப்பந்தம் கைச்சாத்தாக்கப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியையும் முன்னிட்டு ஏற்பாடான நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகபாடிகளான இராஜாங்க அமைச்சர் டி.வி.சாணக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரே வரவேற்றிருந்தனர்.
இங்கு, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஏன் சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் வெளிநாட்டு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருக்கும் போது நாமல் அனுப்பி வைக்கப்பட்டமையானது ‘ராஜபக்ஷ’ குடும்பத்திற்குள் நாமலை முன்னிலைப்படுத்தும் செயற்பாடா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம், இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்தித்ததோடு, துறைமுக நகரத்தில் மெரினா உல்லாச நடைபாதையையும் திறந்து வைத்திருந்தார்.
அத்துடன், துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டுவிட்டு தனது விஜயத்தினை பூர்த்தி செய்து கொண்டு பெய்ஜிங்கிற்கு திரும்பியுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தருவதற்கு முன்னர் தான் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 20ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை, இலங்கை தரமற்றது எனக்கூறி நிராகரித்திருந்தது.
குறித்த உரத்தை கொண்டு வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்கள் நங்கூரமிட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை.
மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சீனா இட்டபோதும், யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் ஆரம்பிக்கப்படவிருந்த சக்தி திட்டங்களை கைவிடுவதாக கூறியபோதும் இலங்கை அமைதியாக இருந்தது.
எனினும், சீனாவின் உரக்கப்பல் திரும்பிச் செல்ல வேண்டு என்று வலியுறுத்தப்பட்டது. எதிர்ப்புக்கள் அதிகமாகவும் சீனக் கப்பல் மீளத்திரும்பியது. ஆனால் வெறுங்கையுடன் செல்லவில்லை.
கொண்டு வந்த உரத்தினையும், கடலில் தங்கியிருந்தமைக்கான இழப்பீடாக 6.9 மில்லியன் டொலர்கள் கடன்களையும் பெற்றுக்கொண்டு விட்டடே அக்கப்பல் நகர்ந்திருக்கின்றது. அதன் பின்னர் தான் கறுப்பு பட்டியலில் இட்ட மக்கள் வங்கியையும் சீனா அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
மறுபக்கத்தில், வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கு மாகாணங்களில் சாதாரண பொதுமக்களுக்கு நன்கொடைகள் என்ற அடிப்படையில் பல மில்லியன் மானியங்களை வழங்கி வருகின்றது.
இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், இலங்கை மக்கள் மீது அதீத கரிசனை கொண்ட நாடு என்றும் தன்னைக் காண்பிக்கின்றது.
ஆனால், உரவிடயத்தில் சீனாவின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. ஆகவே சீனா, எந்தவொரு விடயத்தினையும் முன்னெடுக்கின்றது என்றால் அதில் தன்னுடைய நலன்களுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவத்தினை வழங்குவதாக இருக்கிறது.
அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் வெறுமனே துறைமுக நகரின் நடைபாதையை திறந்து வைப்பதற்காகவா மாலைதீவிலிருந்து வருகை தந்திருப்பார்.
ஆகவே தான் அவருடைய வருகையின் உண்மையான காரணத்தினை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் பகிரங்கமாக வலியுறுத்துகின்றன.
ஏனென்றால் சீனாவின் உண்மையான முகம் கண்முன்னே இருக்கின்றது. சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமையினால், உகண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளது.
உகண்டாவிடமிருந்து என்டபே சர்வதேச விமான நிலையம் இல்லாது போவதை தவிர்க்கும் வகையில், சீனாவுடன் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உகண்டா முயற்சித்து வருவதாகவும் சில சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டபே சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்காக, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து உகாண்டா, 200 டொலர்கள் மில்லியன் கடனாக பெற்றதாகவும், அந்த கடன் நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என, உகண்டா அரசாங்கத்தின் பிரதம சட்ட அதிகாரி, அந்த நாட்டு நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ப்ளும்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை முக்கியமானது.
-பெனிற்லஸ்-