நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீர்வையும் ஏற்கப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை மேற்கத்தி நாடுகள் கண்டித்து வருகின்றன. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்காகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு துளியும் கிடையாது.
இருந்தாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது என்பதற்கான உறுதிமொழியை அந்த அமைப்பு அளிக்க வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது.
தற்போது அந்தப் பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, நேட்டோவின் அந்த உறுதிமொழியைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ரஷ்யா ஏற்காது’ என கூறினார்.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ், கடந்த வாரம் நேட்டோவுடன் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யக் குழுவுக்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.