பசிபிக் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதல் வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளது.
தொழிலாளர்கள் ஓடுபாதையில் இருந்து சாம்பலை அகற்றிய பிறகு, டோங்காவின் முக்கிய விமான நிலையமான தலைநகர் நுகுஅலோபாவில் உள்ள விமான நிலையத்தில் தங்களது இராணுவ விமானம் தரையிறங்கியதாக நியூஸிலாந்து கூறியது.
உள்ளூர் நேரப்படி 16:00 மணிக்குப் பிறகு நியூஸிலாந்தின் சி-130 ஹெர்குலஸ் விமானம் டோங்காவைத் தொட்டதாக நியூஸிலாந்தின் கூட்டுப் படைகளின் தளபதி ரியர் அட்மிரல் ஜிம் கில்மோர உறுதிப்படுத்தினார்.
இதில், தண்ணீர் கொள்கலன்கள், தற்காலிக தங்குமிட கருவிகள், மின்சார ஜெனரேட்டர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் அடங்குவதாக கூறினார்.
மேலும், பல நாட்களாக மீட்புக் குழுக்களும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் வீல்பேரோக்கள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி டார்மாக்கைத் துடைக்க கடுமையாக உழைத்ததை மகத்தான முயற்சி என்று அவர் அழைத்தார்.
இதன்மூலம் டோங்கா உலகின் பிற பகுதிகளிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு உலகளாவிய தொடர்பை மீண்டும் நிறுவத் தொடங்கியுள்ளது.
முதல் வெளிநாட்டு உதவிச் சுமைகளில் தொலைத்தொடர்புகளைப் பழுதுபார்ப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான உபகரணங்களும், அடிப்படை நீர், மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்களும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவும் இரண்டு போயிங் சி-17 க்ளோப் மாஸ்டர் விமானங்களில், உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அனுப்பிய பிற விமானங்கள் மற்றும் கப்பல்கள் டோங்காவை விரைவில் அடையும் வழியில் உள்ளன.
கடலுக்கு அடியில் எரிமலை மற்றும் சுனாமி அலைகள் டோங்காவை தாக்கியதில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.