வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
பார்க் பியோங்-சியோக், கொரியா குடியரசின் 21ஆவது தேசிய சபையின் சபாநாயகர் ஆவார்.
ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங்-சியோக்கிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஏறக்குறைய 22 ஆயிரம் இலங்கையர்கள் தென் கொரியாவில் தொழில் புரிவதுடன், அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் உயர் தொழில் பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.
இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழில் சந்தையில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பியோங்- சியோக், ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கையின் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் கொரிய அரசாங்கத்தின் உதவிகளை வழங்குவதற்கும் தென் கொரிய சபாநாயகர் உடன்பட்டதுடன், இந்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.