தங்களின் கடல் எல்லை அருகே ரஷ்யா போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அயர்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது.
நேட்டோவின் கூட்டாளிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தங்களது அமைப்பு மேற்கொள்ளும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலார் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சூளுரைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் பால்டிக் கடல் பிராந்தியத்தில் தங்களது பலத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையில் கூடுதல் படைகள் மற்றும் தளவாடங்களை நேட்டோ அனுப்பி வருகிறது.
இதனிடையே அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த டென்மார்க், லிதுவேனியாவில் எஃப்-16 வகை நவீன போர் விமானங்களைக் குவித்து வருகிறது.
ஸ்பெயினும் பல்கேரியாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. விரைவில் அந்த நாட்டுக்கு போர் விமானங்களையும் ஸ்பெயின் அனுப்பலாம் என்று தெரிகிறது.
இதுதவிர, ரேமேனியாவுக்கு அனுப்புவதற்காக கூடுதல் படையினரை பிரான்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பு விரிவுபடுத்தப்படக் கூடாது என்று ரஷ்யா வலியுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கையால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்து கடற்கரைக்கு 240 கி.மீ. தொலைவிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷ்யா இராணுவப் பயிற்சியில் அடுத்து வரும் வாரங்களில் ஈடுபடவுள்ளது.
அது சர்வதேசக் கடல் எல்லையாக இருந்தாலும், அந்தப் பகுதி அயர்லாந்தின் பொருளாதார மண்டல எல்லைக்குள் அடங்குகிறது.
உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ள ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இத்தகைய போர்ப் பயிற்சிகளை வரவேற்க முடியாது என்று அயர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.