உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன சாதமான பதிலினை வழங்கியுள்ளார்.
ரக்குவானை சென்.ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணம் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி செயலாளர் ரூபன் பெருமாள் ஆகியோர் தலைமையில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்தகாலத்தில் இந்தப் பாடசாலைக்கு 1 ½ ஏக்கர் காணியை செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்திருந்ததுடன், 03 மாடி கட்டடம் ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், ‘அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்த பாடசாலையின் வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பாரிய பங்களிப்பு உள்ளது.
ரக்குவானை சென்.ஜோன்ஸ் பாடசாலையை சுற்றியுள்ள 50 கி.மீ தூரத்துக்கு உட்பட்ட தோட்டப்புறங்களுக்கு இந்தப் பாடசாலையே பிரதான பாடசாலையாக காணப்பட்டதால் இ.தொ.கா இப்பாடசாலையின் அபிவிருத்தியில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்துள்ளது.
எதிர்காலத்திலும் பாடசாலையின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் முன்னின்று செயல்படும். இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
2014ஆம் ஆண்டு அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக முவாயிரத்துக்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர் நியமன பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தனர்.
கடந்த காலத்தில் இவர்கள் பகுதிப்பகுதியாக உதவி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். என்றாலும் ஆசிரியர் சேவைக்கான தரத்தை பூர்த்தி செய்துள்ள பல உதவி ஆசிரியர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படாதுள்ளது.
இப்பாடசாலையில் உள்ள உதவி ஆசிரியர்கள் உட்பட நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்களுக்கு விரைவாக நியமனத்தை வழங்குவதன் ஊடாக அவர்களது வினைதிறனான சேவை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை இவர்களுக்கும் வழங்க வேண்டும்.“ என பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, “ஜனாதிபதியின் செளபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கல்வி செயற்பாடுகளிலும் கல்வி சமூகத்தின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சென். ஜோன்ஸ் பாடசாலையை தேசிய பாடசாலையாக்கும் கோரிக்கையை செந்தில் தொண்டமானே முன்வைத்திருந்தார்.
இப்பாடசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டடத்தை அமைக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ள சூழலில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவுப்படுத்துமாறு செந்தில் தொண்டமான் தற்போது விடுத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி விரைவாக அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.
5000 ரூபாய் கொடுப்பனவில் உதவி ஆசிரியர்களை உள்ளடக்குவதற்கான வாய்ப்பினை ஆராய்வோம்.“ எனக் குறிப்பிட்டார்.