இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கச்சேரியில் கடந்த 25ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதில் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரும் அழைக்கப்பட்டார். ஆனால், அக் கூட்டத்தில் சம்பந்தமில்லாத விடயம் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிரச்சினை யாழ். மத்திய பேருந்துக்கு அருகில் பஸ் நிலையமொன்று கட்டப்பட்டது. இக் கலந்துரையாடலில், அங்கே செல்லும்படியாக முகாமையாளர் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதற்கான காணொளி ஆதாரங்களும் உள்ளது.
அங்கே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கஜன் இராமநாதன், முகாமையாளரை கடுமையாக அவமதித்தது, ஒட்டுமொத்த வடபிராந்திய தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்கூட்டத்திலே, முகாமையாளருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த அழைப்பை எடுத்து பேசுவதை கூட அவர் கண்டித்துள்ளார்.
நாங்கள் எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொள்கின்றோம். இன்றைய நடைமுறை சூழலில் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்போது, அது கதைப்பது இயல்பு. அதைக் கூட அவர் கண்டித்திருக்கின்றார்.
அதுமாத்திரமின்றி, பேருந்து நிலையப் பிரச்சினையை கொண்டு வந்து, நாங்கள் அங்கே செல்லவேண்டும் என்ற பிரச்சினைக் கொண்டு வந்து, அங்கே செல்லா விட்டால் பிறிதொரு முகாமையாளரை நியமித்து, இதை நான் செய்து காட்டுவேன் என சொல்லி, அனைத்து தொழிற்சங்கங்களையும் அவமதித்துள்ளார்.
கலந்துரையாடலுக்கு தொழிற்சங்கங்களை அவர் அழைத்திருந்தார். அதிலே சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் மட்டுமே சென்றிருந்தது. ஏனைய தொழிற்சங்கங்கள் செல்லவில்லை.
ஏனெனில் முகாமையாளருக்கே இந்த நிலைமை என்றால் எங்களுக்கு என்ன நிலைமை என்று தெரியாததால் நாங்கள் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை.
ஆகவே, அவரின் அதிகாரத்தைப் பிரயோகித்தமையானது, தொழிலாளர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியமையால், அவர் பகிரங்கமாக வடபிராந்திய தொழிலாளர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.
வடபிராந்திய முகாமையாளரை நாங்கள் நியமிக்கும்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரின் நியமனத்தை நிறுத்தியிருந்தார். இதனால் வடக்கில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
வடபிராந்தியத்தில் ஒவ்வொரு சாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை, பேருந்துப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கும், நேரத்தில் மும்மொழிகளும் தெரிந்த முகாமையாளரை நியமித்த போது அவர் அதை இடைநிறுத்தினார்.
பின்னர் நாங்கள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்த போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி தந்ததன் பிற்பாடே போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த முகாமையாளர், வந்த பிற்பாடு மேன்முறையீட்டு சபை உட்பட தொழிலாளர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இலங்கைப் போக்குவரத்து சபையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் அவை தீர்க்கப்படவில்லை.
இப்போது எங்களுடைய தொழிலாளர்களின் வருமானம் யாழ் பஸ் நிலையத்தில் தான் தங்கியுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயார்.
ஆனால், தரப்படுகின்ற பேருந்து நிலையங்களை எங்களுக்கு இரண்டாகப் பிரித்து, ஒரு கட்டமைப்புடன் எங்களுக்குத் தர வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.
இன்று எத்தனையோ கோடி செலவில் வவுனியா பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சேவையாற்றுகின்ற அனைத்துப் பேருந்துகளும் அந்த நிலையத்திற்குள் செல்வதில்லை.
இதனால், பொதுமக்கள், கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா பஸ் நிலையமும் எங்களுக்கு இரண்டாகப் பிரித்து தரப்படும், நீங்கள் சிறப்பாக சேவை செய்யலாம் என்று சொல்லியும், அதற்காக நீதிமன்ற உத்தரவும் இருந்தும் அதற்கான தீர்வு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல், மன்னார் பேருந்து நிலையமும் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதற்கான தீர்வும் இன்று வரை எட்டப்படவில்லை. இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு எத்தனையோ தடவை கல்லால் அடித்திருக்கின்றார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
குறித்த போக்குவரத்து நிலையத்திற்கு நாங்கள் போகத் தயார். ஆனால், மாகாணங்களுக்கான சேவை மட்டும்தான் அதிலே செயற்படுத்த முடியும்.மேலும், குறித்த பேருந்து நிலையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டால் மாத்திரமே அந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.