இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று(வியாழக்கிழமை) அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோத தலைமையிலான பொலிஸ் குழுவினர் கடற்படையுடன் இணைந்து குறித்த கடல் பரப்பில் சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கடல்பரப்பில் ஈரானில் இருந்து 200 கிலோகிராம் போதைப்பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்து மறித்துபோது கப்பலில் இருந்த சுமார் 200 கிலோ போதை பொருளை கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ள நிலையில் கடத்தல்காரர்கள் 9 பேரை கைது செய்ததுடன் அவர்கள் பாவனைக்காக வைத்திருந்த போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்தவர்களையும் கப்பலையும் இன்று அதிகாலை கொழும்பு கடற்படை முகாமிற்கு கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.