தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.
73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
“சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடைபெறுவதுடன் நாட்டில் கொரோனா தொற்று நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி புறக்கணித்துள்ளது.
இதேவேளை, தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைகுண்டு மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் திருப்தியளிக்காமை காரணமாக பேராயர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.