நைஜீரியாவில் ஒரு மிதக்கும் உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஏற்றிச்செல்லும் கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் இருந்த 10 பேரின் நிலைக் குறித்து இன்னமும் உறுதியான மற்றும் தெளிவான தகவல்கள் இல்லை.
இரண்டு மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை சுமந்து செல்லும் திறன் கொண்ட, நைஜீரியாவின் ஷெபா ஆய்வு மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்திக் கப்பலான டிரினிட்டி ஸ்பிரிட் கப்பலே நேற்று (வியாழக்கிழமை) காலை உக்போகிடி எண்ணெய் வயல் அருகே வெடித்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், நைஜர் டெல்டா நதிக்கு அருகில் உள்ள எஸ்க்ராவோஸ் முனையத்திற்கு அருகே கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்கு அடியில் மூழ்கி வானத்தில் அடர்ந்த கறுப்பு புகை கசிவதைக் காணலாம்.
செப்கோலின் தலைமை நிர்வாகி இகெமெஃபுனா ஒகாஃபோரின் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த நேரத்தில் எந்த உயிரிழப்புகளும் இல்லை, ஆனால் சம்பவத்திற்கு முன்னர் கப்பலில் பத்து பணியாளர்கள் இருந்ததை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
வெடிப்புக்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது, மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான தரப்பினருடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என கூறினார்.
மூன்று மாதங்களில் நைஜீரியாவின் இரண்டாவது பெரிய சுற்றுச்சூழல் பின்னடைவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகின்றது. கடந்த நவம்பரில் இதேபோன்றதொரு சம்பவம் அங்கு பதிவாகியிருந்தது.