கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய தரத்தில் முன்னோடியில்லாத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் பிற வாகனங்கள் நாட்டின் தலைநகரில் நகர வீதிகளை முற்றுகையிட்டுள்ளன. இதனால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்தநிலையில், ஒட்டாவா குடியிருப்பாளர்கள், உள்ளூர் பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்காக முனையவில்லை என கோபமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நகரின் பொலிஸ்துறைத் தலைவர், இந்த ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு விருப்பம் என்று கூறினார். ஆனால் ட்ரூடோ அந்த யோசனையை நிராகரித்தார். இராணுவத்தை அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் கூறினார்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை தாண்டிய டிரக்கர்களுக்கான மத்திய கொவிட்-19 தடுப்பூசி ஆணையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். மற்றவர்கள் ட்ரூடோ தனது அதிகாரத்தை மீறிய காரணத்திற்காக அவரை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே, கொவிட்-19- தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வருடக் கட்டுப்பாடுகளால் அதிகரித்து வரும் விரக்திக்கு மத்தியில் இந்த வார இறுதியில் நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ரொறன்ரோ மற்றும் அதன் நிதி மையமான கியூபெக் நகரிலும் இதேபோன்ற போராட்டங்களை நடத்த ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார். ரகசிய இடத்திலிருந்து தனது பணிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.