இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையிடம், ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்,இணையவழியில் முறைகேடாக கிரிப்டோ கரன்சிகளைப் (எண்ணிம நாணயங்கள்) பெறுவது அந்த நாட்டு அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு எதிராக, தங்களது அணு ஆயுதங்களையும் அந்த ஆயுதங்களை ஏந்தி முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த வல்ல ஏவுகணைகளையும் மேம்படுத்தும் திட்டத்தை வட கொரியா முன்னெடுத்துச் செல்கிறது. அணு ஆயதங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான நடவடிக்கையில் அந்த நாடு இறங்கியுள்ளது.
ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் செலுத்தக் கூடிய ஏவுகணை, வளிமண்டலத்துக்கு அப்பால் சென்று, பிறகு மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணை போன்றவற்றின் தொழில்நுட்பங்களை வட கொரியா சோதித்துப் பார்த்துள்ளது.
இதுமட்டுமன்றி, அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் திறன், கடல் பகுதி உள்ளிட்ட எத்தகைய இடத்திலிருந்தும் அணு ஆயுதத்துடன் ஏவுகணையை செலுத்தக் கூடிய வல்லமை, ஏவுகணைப் படையின் அதிகரிக்கும் திறன் ஆகியவற்றை வட கொரியா புதிய சோதனைகளில் பறைசாற்றியுள்ளது.
தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பொருள்கள், தொழில்நுட்பம் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து பெறும் முயற்சிகளில் வட கொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இணையதளம் மூலமாகவும் கூட்டு அறிவியல் ஆய்வுகள் மூலமும் அணு ஆயத தொழில்நுட்பங்களை வட கொரியா நாடி வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.