உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்ற நிலையில், இந்த நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என அமெரிக்க எச்சரித்துள்ளது.
வொஷிங்டனில் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்டஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பைடன் மேலும் கூறுகையில், ‘ரஷ்யா படையெடுத்தால் அதாவது டாங்கிகள் அல்லது துருப்புக்கள் உக்ரைனின் எல்லையைத் தாண்டினால், மீண்டும், இனி நோர்ட் ஸ்ட்ரீம் 2 இருக்காது. நாங்கள் அதை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என கூறினார்.
‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதை எப்படி சரியாகச் செய்வீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், ‘நாங்கள் செய்வோம், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நாங்கள் அதை செய்ய முடியும்’ என கூறினார்.
அதே கேள்வியை ஸ்கோல்ஸிடம் கேட்டபோது, ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்டஸ் மிகவும் வித்தியாசமான பதிலைக் கூறினார்.
‘உக்ரைனுக்கு எதிராக இராணுவ ஆக்கிரமிப்பு இருந்தால் தேவையான பொருளாதாரத் தடைகளுடன் தயாராக இருக்க எல்லாவற்றையும் நாங்கள் தீவிரமாக தயார் செய்துள்ளோம்,’ என்று அவர் நோர்ட் ஸ்ட்ரீமைக் குறிப்பிடாமல் கூறினார்.
‘நாங்கள் எல்லாவற்றையும் பொதுவில் உச்சரிக்காத செயற்முறையின் ஒரு பகுதியாகும், ஏனென்றால் இன்னும் அதிகமாக வரக்கூடும் என்பதை ரஷ்யா புரிந்து கொள்ள வேண்டும்’ என கூறினார்.
ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான நார்ட் ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் உண்மையான எரிவாயுவை கொண்டு செல்லவில்லை.