புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கிழக்கில் உள்ள நாடாளுமன்றம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தலைநகர் திரிபோலியில் லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இடைக்காலத் தலைவரான 62 வயது அப்துல்ஹமித் டிபீபா, வீடு திரும்பும் வேளையில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ஒரு ‘கொலை முயற்சி’ என விசாரணை அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
துப்பாக்கி தோட்டாக்களில் ஒன்று பிரதமரின் காரின் கண்ணாடிக்குள் ஊடுருவியது. ஆனால் அவரும் அவரது சாரதியும் காயமின்றி தப்பினர்.
இந்த தோட்டாக்கள் இலகுரக ஆயுதத்தில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என்றும், ஒருவேளை இது கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கியாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து லிபியாவின் தலைமை வழக்கறிஞர் விசாரணையை தொடங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.
மிஸ்ரட்டா நகரத்தைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த தொழிலதிபரான டிபீபா, மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் ஆதரவு பெற்ற தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், டிசம்பர் 24ஆம் திகதி நாட்டைத் தேர்தலுக்கு வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், விதிகளை மீறி அவர் நவம்பர் மாதம் தன்னை வேட்பாளராக அறிவித்தார்.